Monday, September 28, 2009

இந்தியாவும் அதன் நம்பிக்கைகளும்


இந்தியாவும் அதன் நம்பிக்கைகளும்

உலகத்தில் பார்வையில் இந்தியா இன்றளவும் ஆன்மீகத்தின் பிறப்பிடமாகவும், உறைவிடமாகவும், களஞ்சியமாகவும் அறியப்பட்டு வருகிறது. எண்ணற்ற சமயங்களை தன்னுள் கொண்டுள்ள இந்தியாவிற்கு உடனடி அறிமுகமாக இருப்பது அதன் மக்களிடத்தில் காணப்படும் நம்பிக்கைகள் தான். இந்த நம்பிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதுதான் ஆச்சிரியத்திலும் ஆச்சிரியம். பல தலைமுறைகளுக்கு முன் இருந்த நம்பிக்கைகளும் அதன் வழி சடங்குகளும் சம்பிரதாயங்களும் இன்றைய தலைமுறையினரும் கடைபிடிப்பதை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் எல்லா நம்பிக்கைகளையும் தொடராவிட்டாலும் பெருவாரியான நம்பிக்கைகளை தொடருகின்றனர்.

சமீபத்தில் பீகார் மாநிலத்திலுள்ள கயாவிற்கு சென்றிருந்தேன். அவ்வூரிலுள்ள விஷ்ணுபாத கோயிலில் ஏராளமானவர்கள் தன் முன்னோர்க்கு சிரார்த்தம்/ திதி கொடுத்து கொண்டிருந்தனர். எல்லா வயதினரும் இந்தச் செயலை எந்தவிதக் கேள்வியும் இல்லாமல் செய்து கொண்டிருந்ததை கண்டபோது நான் ஆச்சிரியத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டு இருந்தேன். இறந்தவர்கள் தங்கள் சந்ததிகள் அளிக்கும் சிரார்தத்திற்காக இவ்வுலகிலேயே காத்திருப்பர் அல்லது இறைவனால் சொர்க்க /நரக லோகத்திலிருந்து உலகிற்கு அனுப்பி வைக்கப்படுவர்” என்ற நம்பிக்கை இந்த கணிணி யுகத்திலும் எல்லோருக்கும் இருப்பது எப்படி என்ற கேள்ளி இன்னமும் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

இந்தியாவை ஆன்மீகம் இறுகபற்றிக் கொண்டிருப்பதின் காரணம் அதன் சக்திவாய்ந்த மாபெரும் இதிகாசங்களான இராமாயணமும், மகாபாரதமும் தான். கற்றவர், கல்லாதவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் தெரிந்திருக்கக்கூடிய இந்த இரண்டு இதிகாசங்களின் தாக்கம்தான் இந்திய மக்களின் ஆழமான நம்பிக்கைகளுக்கு மூல காரணம். மேலும், பக்தி இயக்கம் இந்தியவில் எப்பொழுதுமே இருந்த வந்திருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் இதன் எழுச்சி பன்மடங்காக இருந்திருக்கிறது. பக்தி குறித்த நூல்கள் தான் தமிழில் மிக அதிகம் என்பது நாமெல்லோரும் அறிந்ததே. மார்கழி மாதங்களில் பல ஊர்களில் விடியற்காலையில் திருப்பாவையையும், திருவெம்பாவையையும் ஒலிக்கச் செய்வதை நான் கேட்டிக்கிறேன்.

தென்கோடியிலிருக்கும் மக்கள் நடந்தே காசிக்குச் சென்று வந்த வரலாறும் கூட இங்கு உண்டு, அவ்வளவு ஏன்? காஷ்மீரில் இருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க நாளுக்கு நான் மக்கள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. தீவிரவாதிகளின் பலத்த அச்சுறுத்தலையையும் தாண்டி மக்கள் அங்கு சென்று கொண்டுதான் இருக்கின்றனர். மிகுந்த பனிப்பொழிவையும் பொருட்படுத்தாது அந்தக் கரடுமுரடான பாதைகளில் சென்று இறைவனை தரிசிக்கத் தூண்டுவது எது?

திருநெல்வேலியில் படிக்கும் போது, பாதயாத்திரையாகவே பலர் சபரிமலைக்கு செல்வதை நான் பார்த்திருக்கிறேன். அதேப்போல, பழநி முருகன் கோயிலுக்கும், அருகிலுள்ள ஊர்களிலிருந்து பலரும் பாதயாத்திரையாக வந்து இறைவனை தரிசிப்பதுண்டு. மேலும் குறிப்பாக ழுருக பக்தர்கள் தான், இறை நம்பிக்கையில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனரோ என்று சிலநேரம் எண்ணச்செய்வதுண்டு காரணம், அவர்களில் பலர் தங்கள் உடம்பில் ஏராளமான வேல்களை குத்திக்கொண்டும், தேர் இழுத்துக் கொண்டும் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செய்வது மெய்சிலிர்க்க வைக்கக்கூடிய ஒன்றாகும்.

எதனையும் கடவுளாக ஏற்கக்கூடிய மனப்பான்மை இந்து மதத்திற்கு உண்டு, சிறிய கல்லைக்கூட கடவுளாக மதித்து போற்றி வணங்கக் கூடிய மக்கள் இன்றளவும் பரவலாக இருக்கின்றனர். வேப்ப மரத்தை, சக்தியின் வடிவமாகவும், அம்பிகையின் உறைவிடமாகவும் போற்றி வணங்கும் மக்கள் இருக்கத்தானே செய்கின்றனர். இப்படிப்பட்ட நம்பிக்கைகள், அவர்களின்இரத்தத்திலும், இரத்த சுழற்சியிலும் கலந்துவிட்ட ஒன்றுதான் என்றபின் அது மிகையாகாது.கடவுள் மறுப்புக்கொள்கை தான் பகுத்தறிவு என்று முட்டாள் தனமாக எண்ணிக்கொண்டிருக்கும் திராவிட கழகங்களின் வளர்ச்சியினால் மேற்கூறிய நம்பிக்கைகளில் ஒரு சிறிய தேக்கம் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. மக்கள் தன் இயல்பான பாதையிலிருந்து விலகி பயணிக்கத் தொடங்கினர். ஆனால், இப்பயணம் சில காலம் மட்டுமே நீடிக்க முடிந்தது. கடலிலிருந்து உருவாகும் நீர், பல பயணங்களை மேற்கொண்டாலும் அது மீண்டும் தான் தோன்றிய இடத்திற்கு வந்து சேர்வதைப்போல, தமிழக மக்கள் சில காலம் தம் இயற்கைத்தன்மையை மறந்து விட்டிருந்தாலும் விழிப்புணர்வு பெற்று மீண்டும் தம் இயற்கையான வழிபாட்டிற்கு திரும்பி விட்டனர். திராவிடத் தலைவர்களும், பல காலம் தம் இறை நம்பிக்கையை மூடிவைக்க முடியால், தற்போது சிறிய மாற்றங்களுடன் தம் ஏற்புத்தன்மையை வெளிபடுத்தத் தொடங்கி விட்டனர்.

சடங்குகளும், சம்பிரதாயங்களும் தற்போது மீண்டும் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளன. இன்றைய தலைமுறையினர் அதனை விரும்பி ஏற்றுக் கொண்டுள்ளனர். தர்க்க ரீதியாக அதனைப்பற்றி விவாதிப்பதோடு, அதிலிருக்கும் சில பழமைத்தனங்களை களைந்து புதிய மெருகேற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.


No comments:

Post a Comment