Tuesday, December 21, 2010

ஹிந்து மதத்தின் வீழ்ச்சி ஏன் !

'ஹிந்து மதம்', 'ஹிந்து' என்ற சொல் இந்திய சமயத்தினர்கள் மீது வெள்ளைக்காரர்கள் திணித்ததே. இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, தமிழில் சமயம் என்றும் வடமொழியில் 'தர்ம(ம்)' என்றே வழங்கப்பட்டு வந்தது. சடங்குகளையும், கொள்கைகளையும் சார்ந்தது சமயங்கள் அவற்றின் வேறுபாடுகளை வைத்து வைதீகம் (பார்பனர்களின் சமயம்), பவுத்தம், ஆசிவகம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ சமயம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறலாயிற்று. ஆதி இந்தியர்கள் இவற்றில் எதோ ஒரு சமயம் சார்ந்தவர்களாக இருந்தனரேயன்றி அனைத்தையுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். பெளத்தன் சமணனை சாடுவதும், இருவருவரும் ஒருவருக்கொருவர் சாடுவதும், சேர்ந்து வைதீக சமயத்தைச் சாடுவதுமாக இருந்தனர்.

இந்திய புறச் சமயத்தினரான வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு முன்பே வந்த லோடி வம்சமும், கஜினி முகம்மதுவும் இங்கே இந்தியாவில் நிலவிய சமயங்கள் அனைத்தையும் பொதுவான ஒன்றாகவே பார்த்தனர், சிந்து நதிக்கு கிழக்கே இருப்பதால் 'இந்தியா' என்று இங்கு நிலவிய சமயங்கள் அனைத்திற்கும் பொதுவான பேராக 'ஹிந்து' சமயம் என்றும் பெயரிட்டனர். அந்த பெயர்கள் அவர்களுக்குள் அழைத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டதே அன்றி, பாரத நாட்டினரான நீங்கள் இன்று முதல் இந்தியராகவும், இந்துக்களாகவும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் ஆணை பிறப்பிக்கவில்லை. அதாவது சைனா நாட்டினரை சீனர்கள் என்கிறோம், ஒரு சீனரிடம் சென்று நாம் அவர்களை 'சீனர்கள்' என்று சொல்வதைச் சொன்னால் தான் அவனுக்கு அப்படி அழைக்கப்படுவதே தெரியும். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களை 'சீனர்கள்' என்று அழைக்கிறார்கள் என்பது சீனருக்கு தெரியாது. இப்படி புறசமயத்தினர் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட ஒன்றை, விடுதலை போராட்ட்ட காலத்தில் இந்திய சமயத்தினரை ஒன்று திரட்ட இங்குள்ளவர்கள் பயன்படுத்தத் தொடங்கிய போது தான் 'இந்தியா', ஹிந்து என்ற சொல் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை மக்களின் முகவரிகள் எதோ ஒரு இந்திய சமயம், பாரத தேசத்தை / நாட்டை சேர்ந்தவன் என்பதாகத் தான் இருந்தது. கடவுள் கொள்கை என்றால் அதை மதம் என்றே அழைத்து பழகிய புறசமயத்தினர் (வெளிநாட்டினர்) பாரத சமயங்களை மதம் என்ற ஒற்றைச் சொல்லுடன் 'ஹிந்து' என்ற பெயருடன் அழைத்தனர், அதுவே 'ஹிந்து' மதம் ஆகிற்று.

இந்தியர்களை ஒருங்கிணைக்கும் சொல் அல்லவா ? என்று நினைக்கலாம். ஆனால் இந்தியா என்பது பல்வேறு கலச்சார நம்பிக்கைகள் கொண்டது, அவரவர் நம்பிக்கையே அவரவர்களுக்கு உயர்வானது, சைவ - வைணவ சண்டைகள் இன்றும் தொடர்வதையும், யானைக்கு வடகலை நாமமா ? தென்கலை நாமமா ? என்கிற வழக்கு இன்று முடிந்தபாடில்லை என்றே சொல்கிறார்கள். இப்படி இருக்கையில் 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லால் யாருக்கு லாபம் ? வேற்றுமையில் ஒற்றுமை காணப்பயன்படுகிறதா ? அப்படி எல்லாம் இருப்பது போல் தெரியவில்லை. இன்றும் வைணவர்கள் சிவனை பொருட்டாக நினைப்பது இல்லை, சைவ சமயத்தினரும் அப்படியே. ஆதிசங்கரின் அறுசமயமும் கொள்கையாக ஏற்கப்பட்டதே அன்றி, அதைத் தவிர்த்து அவை யாதொரு வளர்ச்சியும் பெறவில்லை, ஏனெனில் அவை வலிந்து புகுத்தப்பட்ட ஒன்று. அதாவது சமயங்களை ஒற்றைப் புள்ளியில் இணைப்பது, அல்லது அந்த புள்ளியில் இருந்து பிரிப்பது, அப்படி பிரித்து வழங்க முற்பட்டதே ஆதிசங்கரின் அறு சமயம், ஆனால் அதன் பிறகு இராமனுஜர் போன்றவர் அவருக்கென கொள்கைகள் வைத்திருந்தால் ஆதிசங்கரரின் அறுசமயம் வளர்ச்சியடையவில்லை. எதுக்கு இதைச் சொன்னேன் என்றால், ஒற்றைத் தன்மையில் அடைக்க முயலும் எதுவுமே வெற்றிபெறுவதில்லை என்பதற்காக சுட்டினேன்.

மேலே சொன்னது போல் சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியாவில் இருந்த சமயங்களை ஒருங்கிணைக்க சமயவாதிகளால் புறசமயத்தினர் கொடுத்த 'ஹிந்து' இந்தியா பெயர்கள் பயன்படுத்த முயற்சி நடந்தது, ஆனால் அவை இன்றும் கூட வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. நமக்கு ஆவணங்களில் 'ஹிந்து' இந்தியா என்று போட்டுக் கொள்கிறோம், கொடுக்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் தமிழனை இந்தியனாக நினைக்கும் கர்நாடகத்தவர் இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மொழிகளால் இந்தியா வேறுபட்டது. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது போல் 'புண்ணாக்கு' விற்பனெல்லாம் தொழில் அதிபர் என்கிறான் என்பது போல், கார்ப்ரேட் சாமியார்களாலும், போலி சாமியார்களாலும் 'ஹிந்து' என்ற சொல் ஆன்மிக விற்பனையின் லேபிளாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது பொண்ட்டியின் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடியவனெல்லாம் தன்னை 'ஹிந்து' சாமியார் என்று அழைத்துக் கொள்வதால் 'ஹிந்து' சமயத்தின் பெயர் வெகுவாகவே பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. அதுமட்டுமில்லாமல் வாயில் வந்ததையெல்லாம் உளறி கொட்டி அதை சமய இலக்கியம் என்றும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளையும் புராணங்களையெல்லாம் 'ஹிந்து' என்ற பெயரில் சேர்த்துக் கொள்வதால், அவற்றிக்கு விளக்கமும் சப்பைக் கட்டுகளையும் செயயும் வீன் வேலைக்கு ஆன்மீக வாதிகள் தள்ளப்படுகின்ரனர். மூட நம்பிக்கைகளுக்கு
முட்டுக் கொடுப்பதே வேலையாகப் போனால் சமயங்களையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் ஊட்டுவது எங்ஙனம் ? இராமகிருஷ்ணர், விவேகநந்தர் போன்ற எத்தனையோ மகான்கள் தோன்றினாலும், புற்றீசல்கள் போல் போலிசாமியார்களும் தோன்றி சமய நம்பிக்கைகளை சீர்குலைப்பதால் உண்மையான ஆத்திகருக்குக் கூட சமய நம்பிக்கைள் மீது சந்தேகங்கள் எழும். இவை அனைத்திற்கும் காரணமே தேவைக்கு மிகுதியாக கட்டுக் கதைகளை அவைகள் 'ஹிந்து' மதததைப் போற்றுகிறது என்ற பெயரில் உள்வாங்கியதே.

'ஹிந்து' மதம் என்கிற ஒற்றைச் சொல் ஒருங்கிணைப்பால் இந்திய சமயங்கள் வீழ்ந்ததேயன்றி எழவேயில்லை. பிரித்தாழும் சூழ்ச்சி போல் இவை சேர்த்தறியும் சூழ்ச்சி போலாகும். இந்திய சமயங்கள் அனைத்தும் சேர்ந்து ஒவ்வொன்றின் முரண்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது தான் ஹிந்து மதம் என்றும் அவனே 'ஹிந்து' என்ற கட்டாயத்துக்கு இட்டுச் சென்றுவிட்டது. எவனோ ஒருவன் நரபலி இடுவதை 'இந்து சமய நம்பிகை இல்லை' என்று நம்மால் துணிந்து சொல்ல முடியவில்லையே, இப்படி 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லில் நம்மை நாமே அழைத்துக் கொள்ளாமல் இருந்தால் 'நரபலி இடும் பழக்கம்' சைவ, வைணவத்தில் இல்லை என்று சொல்ல முடியும். இந்திய சமயத்தினர் தங்களின் சமயப் பெயரை விட்டு தம்மை 'ஹிந்து' என்று அழைத்துக் கொள்வது முட்டாள் தனமானது. அப்படி அழைத்துக் கொள்வது இந்திய சமய, தத்துவ நம்பிக்கைளை வீழ்ச்சிக்கே அழைத்துச் செல்லும், அப்படி நடந்ததால் தான் தீண்டாமையால் தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பலர் இந்திய சமய நம்பிக்கைகள் மீது நம்பிக்கை இன்றி புற சமயங்களை நாடி இருக்கின்றனர். பகுத்தறிவு வாதிகளும் இந்திய சமயங்களின் நம்பிகை எது ? மூட நம்பிகை எது ? என்று அறியாமல் ஒட்டுமொத்தமாக 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லைக் குறிவைத்தே செயல்படுகின்றனர். ஹிந்துத்துவா வாதிகளும் அரசியல் நோக்கிற்காக 'ஹிந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் மேற்கொண்டு என்ன சொல்ல ? ...........

 

1 comment:

  1. மிகவும் அவசியமானதொரு விளக்கத்தையுடைய பதிவாக இதை நான் பார்க்கிறேன்.

    இந்த பதிவில் உங்கள் ஆதங்கங்கள் சிலவற்றை சுட்டிக் காட்டினீர்கள். அவை எல்லாம் இந்து மதம் என்றாகி விட்டதை பெரும் மனக்குறையுடன் கூறினீர்கள்.

    இவற்றுக்கெல்லாம் என்ன தீர்வு என்று தேட மறந்து விட்டீர்கள்.

    எனது பார்வையில் மேற்படி எல்லா குறைபாடுகளுக்கும் காரணமாக உங்களவர்கள் உண்மையான இறைவனின் வேதங்களை மறந்து அல்லது புறக்கணித்து அல்லது அவற்றை நெருங்க, படிக்க, பின்பற்ற பிறரால் தடுக்கப்பட்டமையே மூல காரணம் என்பேன்.

    எந்த ஒரு சமூகத்திற்கும் அதன் அடிப்படை அடையாளமாக இருப்பது அவர்களுக்கு இறைவனால் வழிகாட்ட வழங்கப்பட்ட உண்மையான இறை வேதங்களே. ஆனால் உங்களவர்களோ 99.99 % அவற்றை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. அவற்றில்தான் உண்மையான வழிகாட்டுதல்கள் இருக்க அதை விட்டுவிட்டு முன்னோர்களை, அவர்களின் கட்டுக்கதைகளை நம்பி பின்பற்றும் வழக்கத்தை மாதமாக பார்க்க முற்பட்டதே உங்கள் வீழ்ச்சிக்கு மூல காரணம்.

    எனவே அவைகளை தூக்கி எறிந்துவிட்டு உங்களுக்கு இறைவனால் வழங்கப்பட்ட வேதங்கள் எவை என பார்த்து அவற்றை முழுமையாக படித்து புரிந்து அவற்றின் வழிகாட்டுதல்களையே (தற்போது நடைமுறையில் இருக்கும் வழிமுறைகளுக்கு முற்றுமுழுதாக மாற்றமாக இருந்தாலும்) நடைமுறைப்படுத்துவதோடு, ஏனையவர்களுக்கும் அறிவுறுத்துங்கள். அதுதான் உங்களை இறைவனை நோக்கி அழைத்துச் செல்வதற்கான உண்மையான பாதை.

    ReplyDelete