Tuesday, December 21, 2010

அனைவரும் அர்ச்சகர்கள்!

தமிழகத்தில் அரசு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி நடத்த ஏற்பாடுகள் செய்து அதற்கான பள்ளிகளையும் நிறுவியிருக்கிறது. இன்னிலையில் கேரளா ஒருபடி முன்னே சென்று இந்த முறையை செவ்வனே நடத்திக் காட்டியிருக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சி என்னவென்றால், இந்த முயற்சிக்கு கேரள நம்பூதிரிகள் (பிராமண அர்ச்சகர்கள்) முனைப்புடன் முன்னின்று செயலாற்றி வருவதுதான்!!
கேரளாவிலுள்ள கல்பேட்டா என்ற ஊரில் இருக்கும் "பொங்கிணி தேவி" கோயிலில் ஆதிவாசி சிறுவர்கள் 14 பேர் உட்பட அனைத்து சாதிகளையும் சார்ந்த 25 சிறுவர்களுக்கு சமஸ்கிருத மொழி, வேதப் பயிற்சி, கோயில் ஆகமங்கள், மந்திரங்கள் ஆகியவை முறையாக போதிக்கப் படுகின்றன. பையனூர் ஸ்ரீதரன் நம்பூதிரி தலைமையிலான பல அர்ச்சகர்கள் இச்சிறுவர்களுக்குப் பயிற்சியளித்து வருகின்றனர்.
இந்து சமய பழக்க வழக்கங்களையும் நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டுமென்றால் அனைத்து வகுப்பினர்களின் பங்கேற்பு இன்றி நடைபெற இயலாது என்பதை நன்குணர்ந்து நம்பூதிரிகள் இந்த முயற்சியில் முழுமூச்சுடன் இறங்கியிருக்கின்றனர்.
இதேபோல் தமிழ்நாட்டிலும், பிராமண சங்கங்கள், அர்ச்சகர் கூட்டமைப்புக்கள் போன்றவை முன்னின்று தலித்துக்கள் உட்படஅனைத்து வகுப்பினருக்கும் வேதம், ஆகமம் முதலிய பயிற்சிகளை அளிக்க முன்வரவேண்டும். இதனைப் பெருமளவில் தமிழகமெங்கும் பரவலாக நடத்த வேண்டும். அரசுடன் கைகோர்த்து இத்தகைய இந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் அவா!!

No comments:

Post a Comment